கருவறை வாழ்க்கை ஒன்பது மாதம் - நம் கல்லூரி வாழ்க்கை ஆறெட்டு மாதம்.
மீண்டும் கருவறை பயணம் -
சமூக ஆடைகள் களைந்து
நிஜமான நம்மை உணர.
கிளைகள் எங்கோ படர்ந்தாலும் , வேரோடு உறவாட சில நாட்கள்
நரை படர்ந்த நிகழ்வுகளை துறந்து , மீண்டும் வாலிப வாசம்
இரை தேடி பயணிக்கும் பறவைகளாய் , நட்பின் துணை தேடி பயணிப்போம்
நிகழ்வுகள் நுகர்ந்திடுவோம் , இன்னும் சில ஆண்டு சுகமாக அசை போட
யாத்திரிகர்களை
போல
இந்த வாழ்க்கையின்
பயணங்கள்
இரை தேடி
பொருள் தேடி
இரையருள் தேடி
தேடல்களின்
காரணங்கள்
மாறலாம்,
மாறாதது தேடல்கள் அன்றோ?
இளைப்பாற நேரமில்லை
இடைவெளிகள்
தூரமில்லை.
இலக்குகள் நோக்கி
ஓடி, ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
கால்கள் ஓடிக்கொண்டிருக்க
காலமும் ஓடிக்கொண்டிருக்க
கால் நூற்றாண்டு கடந்தது கண்ணிமைக்கும்
நேரத்திலா?
நாங்கள்
இன்னும் இருபதுகள்தான்
ஆம்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்பும்
இன்னும் இருபதுகள்தான்.
கண்களுக்கு
வயதாகலாம்
கண் நிறைந்த
கனவுகளுக்கும்
மனம் நிறைந்த
நினைவுகளுக்கும் அல்லவே.
அதோ தூர வானத்தில்
ஒரு வெள்ளி முளைக்கிறதே..
என்ன செய்தியாம்?
நினைவுகளை
மீட்டெடுக்கும்
வெள்ளி விழா நிகழ்வாம்.
சிறுவாணி பாலூட்ட
மேற்கு தொடர்ச்சி மலை
தென்றல் சீராட்ட
கொங்கு மொழி
தாலட்ட
தொட்டில் ஆடும்
கோவை நகர்தனிலே
CIT என்றொரு
நந்தவனமாம்.
நினைவிருக்கிறதா?
அந்த வசந்த காலம்.
இலையுதிர் காலங்கள் அறியாத நந்தவன நாட்கள் அவை.
பதின் பருவ பட்டாம்பூச்சிகளுக்கு
பாரெங்கும்
பறந்து திரிய
சிறகுகளை பூட்டிய
காலங்கள் அவை..
அருவியை போல
ஆர்ப்பரித்திருந்தோம்
நதியை போல
ஓடியிருந்தோம்.
கடலை போல
கலந்திருந்தோம்.
கவிதை உண்டு
கனவுகள் உண்டு
சில காதலும் உண்டு
பல கதைகளும் உண்டு.
தீர்த்த கரைதனிலே
நின்றோர் பலர்..
தீரா நதியினிலே
தீர்த்த நீராடி சென்றோர் சிலர்.
தீரா பசியும் கொண்டோம்
அள்ளக்குறையா
அட்சய பாத்திரமும் கண்டோம்.
வீடு பிரிந்து
விடுதி சேர்ந்து
நினைவுகள்
வீட்டை சுற்ற
லட்சியங்கள்
நம்மை சுற்ற..
தனிமையை
தனிமையில்
விட்டோம்.
தாய் மடியாய்
தந்தையின் தோளாய்
தாங்கி நின்ற
தோழமையில்
முகிழ்ந்திருந்தோம்.
தாய்மையில்
நெகிழ்ந்திருந்தோம்.
மென் மீசை வளர்ந்த
நாட்களில்
ஆசை வளர்த்து.
ஆசை உதிர்ந்த நாட்களில்
வன் தாடி வளர்த்து
யோகியாகவும்
ஞானியாகவும்
வாழ்ந்த தவ காலங்கள் அவை.
திரியாமல் திரிந்திருந்தோம்
தெளியாமல் தெளிந்திருந்தோம்
அலைகளாக அலைந்திருந்தோம்
தொலையாமல்
தொலைந்திருந்தோம்.
பொங்க
பொங்க
பொங்கல் என்று
தினமும்
தீபாவளிதான்.
ராஜாவும்
ரஹ்மானும்
ரஜினியும்
கமலும்
கல்லூரியில்
சேராமலே
விடுதியில்
எங்களுடன் தங்கியிருந்ததை போல
ஞாபகம்..
ரோஜாவும்
செம்பருத்தியும்
தாமரையும்
ஆவாரம்பூவும்..
பூக்கள் தாண்டி
அர்த்தங்களும் புரிந்தது.
ராதா ராணி
ஜெய்சாந்தி
பல்லவி
அனு பல்லவி
கங்கா காவேரி
எங்கள் கவலைகள் கரைத்த
கலை தாகம் தீர்த்த
பால்ய தோழிகள்.
மணீஸும்
மரக்கடை முருகனும்
எங்களை மனிதர்களாக
மாற்றிய மாபெரும்
பங்குதாரர்கள்.
அங்கே
மாணிக்கங்கள்
பாட்ஷாக்களாகவும்
பாட்ஷாக்கள்
மாணிக்கங்களாகவும்
மாறிய பொழுதுகளும் உண்டு.
கவலைகளும்
களித்து
கசந்ததும்
இனித்த நாட்கள்
அவை..
பொறியாளர்களாக
மட்டும் அல்ல
பொறுப்பான மனிதர்களாகவும்
உருவாக்கிய
குருகூலமன்றோ?
CIT.
அந்த கலர்புல்
காலங்களை
இந்த கருப்பு வெள்ளை
நாட்களில்
மீட்டெடுப்போமா?
கலந்து உரையாடி
களிப்புறுவோம்
பழைய கதை பேசி
கசிந்துருகுவோம்.
மகிழவும்
நெகிழவும்
மகிழ்ந்து நெகிழவும்
நெகிழ்ந்து மகிழவும்
வாருங்கள்.
தங்கள்
நாட்காட்டிகள்
பதியட்டும்
அந்த நல்ல நாட்களை.
திசைகாட்டிகள்
திரும்பட்டும்
CIT நோக்கி..
நமக்கு வழிகாட்டிய வாசலில்
நம்மை வார்த்தெடுத்த
பட்டறையில்
நம் கூடல்
வண்ணங்களின்
ரங்கோலியாகட்டும்.
நட்சத்திரங்கள் கூடும்
நற்பெரும் நிகழ்வில்
பேரன்பு பகிர்ந்து
பெரு மகிழ்ச்சி நிறையட்டும்.
அந்த பசுமை நினைவுகளோடு
வாருங்கள்
மீண்டும் விதைப்போம்.
மீண்டும் விளைவோம்.